Sunday, February 15, 2015

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா?


கேள்வி -  நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா? - ஹாஜா ஹமீது, நாகை

பதில் பி.ஜே - நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும் இணைத்தே முடிவுக்கு வர வேண்டும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.

நூல் : முஸ்லிம் 4115

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?'' என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது'' என்று கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.

நூல் முஸ்லிம் 4116

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.

நூல் : முஸ்லிம் 4117

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 4118


அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நஸ்ஸால் பின் சப்ரா,

நூல் : புகாரி 5615, 5616

முதலாவது ஹதீஸ் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதைத் தடை செய்கின்றது. இரண்டாவது ஹதீஸ் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள் என்று தெரிவிக்கின்றது.

ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு அதை நபிகள் நாயக்ம்  (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஹதீஸ்கள் காணப்பட்டால் தடையையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த அடிப்படையில் நின்று கொண்டு அருந்துவது கூடாது.

எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு நீர் அருந்தினார்கள் என்று பல ஹதீஸ்கள் இருப்பதால், தவிர்க்க முடியாத சமயத்தில் நின்று கொண்டு அருந்தினால் தவறில்லை என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்தினார்கள் என்ற செய்தி புகாரியில் (5617) இடம் பெற்றுள்ளது.

இதை வைத்து ஸம்ஸம் நீரை மட்டும் நின்று கொண்டு அருந்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸில் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே பொதுவாக நீர் அருந்துவதற்கு என்ன சட்டமோ அது தான் ஸம்ஸம் நீருக்கும் உரிய சட்டமாகும்.

உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 4119


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம் நூலில் மிகப் பெரும் அளவுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே இடம்பெற்றிருந்தாலும் மிகக் குறைந்த அளவு பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றில் இந்த ஹதீசும் ஒன்றாகும்.

(குறிப்பு: 2003 ஏப்ரல் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner