Wednesday, April 4, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 2 - PJ

பெற்றோரை மட்டுமின்றி உற்றார் உறவினருக்கு உதவுதல்

அவர்கள் நோய்வாய்ப்பட்டால் விசாரித்தல்

மரணம் ஏற்பட்ட இல்லம் சென்று ஆறுதல் கூறுதல்
 
தீமையான காரியங்கள் நடப்பதைக் கண்டு அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்

நன்மையான காரியங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தல்

பொது நலத் தொண்டுகள் செய்தல்

என எண்ணற்ற நன்மைகளைத் துறவிகள் இழந்து விடுகின்றனர்.'  எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?' என்று 'தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும்?' என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடைகளைத் துறப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாமா? என்று நபிகள் நாயகத்திடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நாம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் தகுதியுடையவன்' என விளக்கமளித்தார்கள்.  நூல்: திர்மிதீ 2693, 2718

யாருமே பார்க்காத போதும், கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்று எண்ணி நிர்வாணம் தவிர்க்க வேண்டும்.

மலஜலம் கழித்தல், இல்லறத்தில் ஈடுபடுதல் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மறைக்க வேண்டியவைகளை மறைத்தே தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இந்த உலகில் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை' என்று கூறி ஆடையை அவிழ்த்துத் திரியும் ஞானிகள்(?) தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஒரு பருக்கையைக் கூட உண்ணாமலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பருகாமலும் இருந்து காட்ட வேண்டும். இந்த இரண்டையும் எந்த நிர்வாணச் சாமியாரும் துறந்ததில்லை. துறக்கவும் முடியாது.

இந்த உலகை அறவே துறந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதை ஒவ்வொரு கவள உணவை உட்கொள்ளும் போதும் இவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

எனவே கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்ற வாதத்தில் ஒருவர் கூட உண்மையாளர்களாக இல்லை

முழுமையாக உலகைத் துறப்பதை மட்டுமின்றி அறை குறையாக உலகைத் துறப்பதையும் கூட இஸ்லாம் மறுத்துரைக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும்

தனக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

தனது பெற்றோருக்குச் செய்யும் கடமைகள்

தனது மனைவிக்கு/ கணவனுக்கு/ செய்யும் கடமைகள்

தனது பிள்ளைகளுக்குச் செய்யும் கடமைகள்

மற்ற உறவினர்களுக்குச் செய்யும் கடமைகள்
 
உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

என அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.


ஆன்மீகத்தையும், கடவுளையும் காரணம் காட்டி இக்கடமை களில் தவறி விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள். 'இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.  நூல்: புகாரி 1975, 6134

கடவுளுக்காக அறவே தூங்காமல் விழித்திருப்பதும், உடலை வருத்திக் கொள்வதும் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

மதங்களை எதிர்ப்பவர்கள் கூட மேற்கண்ட நடவடிக்கைகளை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு எதிர்த்திருக்க மாட்டார்கள்.

அப்படி என்றால் நோன்பு என்ற பெயரில் வருடத்தில் ஒரு மாதம் பட்டிணி கிடக்குமாறு இஸ்லாம் கூறுவது ஏன்? இது உடலை வருத்துவதில்லையா?

தினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும் எனக் கூறுவது ஏன்? இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும், குடும்ப வாழ்க்கை யில் ஈடுபடாமலும் இருப்பது நோன்பு எனப்படும். இது உடலை வருத்திக் கொள்வது போல் தோன்றலாம். உண்மையில் உடலை வருத்துதலோ, உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோ இதில் இல்லை.

நோன்பு நோற்காத போது இரவு பத்து மணிக்கு ஒருவன் படுக்கைக்குச் செல்கிறான். காலையில் எழுந்து பத்து மணிக்கு உணவு உட்கொள்கிறான். இரவு பத்து முதல் காலை பத்து வரை சுமார் 12 மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் தான் மனிதன் இருக்கிறான்.

நோன்பு நோற்பவர், கிழக்கு வெளுத்தது முதல் (சுமார் காலை 5 மணி) சூரியன் மறையும் வரை (சுமார் மாலை 6 மணி) சுமார் 13 மணி நேரம் உண்பதில்லை.

சூரியன் மறைந்து நோன்பு துறந்தவுடனும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் சுமார் 4:30 மணிக்கும் ஆக மூன்று வேளை நோன்பு நோற்பவர் உண்ணுகிறார்.

உண்ணுகிற நேரம் தான் நோன்புக் காலங்களில் மாறுகிறது. உண்ணும் அளவில் மாற்றம் ஏதும் இல்லை

தினமும் தனது உடலுக்கு எந்த அளவு உணவை ஒருவன் அளித்து வந்தானோ அதே அளவு உணவை நோன்பு நோற்கும் நாளிலும் அளிப்பதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உடலை வேதனைப்படுத்துதல் என்பதும் இதில் இல்லை.

ஒரே வித்தியாசம் என்னவென்றால் இரவில் சாப்பிட்டதும் தூங்கி விடுவதால் தனது பசியை உணர்வதில்லை. பகலில் விழித்திருப்பதால் அதை உணர்கிறான்.

இவ்வாறு உணர்ந்து இறைவனுக்காக சில உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவனது உள்ளத்தைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். உடலுக்கு ஒரு கேடும் ஏற்படுத்தாது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.  (அல்குர்ஆன் 2:183)

மனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.

தனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக சிறிது நேரம் உணவைத் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து லஞ்சம் வாங்கி, மோசடி செய்து பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான்.

இந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.

யார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும், உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி.  நூல்: புகாரி 1903, 6057

மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு' என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.

தொழுகை எனும் வணக்கமும் இது போன்ற பயிற்சியை மனிதன் பெறுவதற்காகவே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன்' என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான்.

இவ்வுலகில் மனிதனைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஈர்க்கப்படும் மனிதன் தவறான வழிகளிலேனும் அவற்றை அடைய முயல்வான்.

நமக்கு மேலே ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்' என்ற அச்சம் தான் அவனை இதிருந்து தடுத்து நிறுத்தும். முதல் வைகறை நேரத் தொழுகையை ஒருவன் தொழுகிறான். இதனால் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மிகைக்கிறது.

இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கத் துவங்குகிறது. எனவே நண்பகல் நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுத வுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.

மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. மாலை நேரத் தொழுகையைத் தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மீண்டும் ஏற்படுகிறது.

மீண்டும் இறைவனைப் பற்றிய நினைவு டிகுறைய ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் மீண்டும் தொழுகிறான். மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. எனவே இரவு நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது. அந்த நினைவுடனேயே உறங்கச் செல்கிறான். இவ்வாறு நாள் முழுவதும் இறைவனைப் பற்றிய அச்சத்துடன் வாழும் ஒருவன் எல்லா வகையிலும் நல்லவனாகத் திகழ்வான். தனக்குக் கேடு தரும் காரியத்தையும் இவன் செய்ய மாட்டான். பிறருக்குக் கேடு தரும் காரியத்தையும் செய்ய மாட்டான். தொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது.
 
தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.  அல்குர்ஆன்-29:45


தீமைகளை விட்டும், வெட்கக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
 
இந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களை வசதி படைத்தவர்கள் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது.
 
இவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இரத்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.

பெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்ச்சியாகவும், பட்டிணியின்றியும் இருக்க வேண்டும் என்பதும், இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் தான் இதன் நோக்கமாகும். அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.   (அல்குர்ஆன் 22:37)

இந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

இஸ்லாத்தினுடைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.

திருட்டு ஒரு தவறான தொழில் என்பது திருடுபவனுக்கு நன்றாகத் தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது, இன்ன பிற மோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறா னவை தான் என்பது அதில் ஈடுபடுவோருக்கு நன்றாகத் தெரியும். தவறு எனத் தெரிந்து கொண்டு தான் அவற்றைச் செய்து வருகின்றனர்.

இத்தகையோரிடம் இவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன. இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்? 1 இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன?

இது தான் அந்தக் கேள்விகள்.

உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள்; சிறையில் வாட வேண்டி வரும்; அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள்!' என்று தான் அவனிடம் கூற முடியும்.
 
அவனிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது.

நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டு பிடிக்க முடியாது.
 
நூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம்.
 
நூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடுபடுகிறார்.
 
பல முறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார். அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன் அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன்.

இவற்றையெல்லாம் மீறிச் சிறையில் தள்ளப்பட்டாலும் நான் செத்து விடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்பான் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதால் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு' என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து அவன் ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

 என்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம். 'இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக் கிடைக்கும் நன்மை என்ன?' என்ற கேள்விக்கு எந்த விடையும் கூற முடியாது. இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.' சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக்
கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ, விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும் நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான்' என்று இஸ்லாம் கூறுகிறது.

இதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். தன்னையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.

ஒவ்வொரு மனிதனும் தனது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உலகுக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மனிதனுக்கு எந்தக் கேடும் விளைவிக்காத வகையிலும் தான் இஸ்லாம் கூறும் வணக்கங்கள் அமைந்துள்ளன.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner