Wednesday, July 4, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 2 - பி.ஜே

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014
பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.

நோன்பின் சட்டங்கள் - தொடர் 1 - பி.ஜே

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய நோன்பின் சட்டங்கள் என்ற புத்தகத்தை தலைப்பு வாரியாக வெளிவரும். தொடராக வெளியிடுவதால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும். இதில் நோன்பு சம்பந்தமான அதிகப்படியான விளக்கங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நோன்பு காலங்களில் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம்.

நோன்பை முறித்து விடக் கூடிய காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

நோன்பை முறிக்காத காரியங்களை, நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று நினைத்து, தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.

நோன்பைக் குறித்துப் பலவிதமான மூட நம்பிக்கைகளும் சமுதாயத்தில் உள்ளன. எனவே நோன்பைப் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:184

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

நோன்பைக் கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விடுத்து ரமளான் மாதத்தை இறைவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான்.

மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது. நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நோன்பின் நோக்கம்

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.

பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

இஸ்லாத்தில் கருணைக் கொலை கூடுமா?

போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். திருக்குர்ஆன் 4:93

கொலையில் கருணை என்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஒருவன் எவ்வளவு தான் துன்பத்தை அனுபவித்தாலும் அவற்றையும் தாங்கிக் கொண்டு வாழவே விரும்புகிறான். ஒருவன் படும் துன்பத்துக்கு இரங்குகிறோம்'' எனக் கூறி அவனைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை.

வறுமையின் பிடியில் சிக்கியவர்கள், பார்வையிழந்தோர், உறுப்புக்களை இழந்தோர் செத்து விட்டால் நல்லது'' என்று சில சமயம் கூறி விடுவார்கள். அவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது அதன் பொருளன்று. தனது துன்பம் சாவுக்கு நிகரானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மற்றபடி அவர்களும் வாழவே விரும்புகிறார்கள்.

முதியோர்களைக் கவனிக்க விரும்பாதவர்கள், நோயாளிகளைக் கண்டு விலகுபவர்கள் தங்களின் இந்தக் கொடூரமான மனப்பான்மையை கருணைக் கொலை' என்ற போர்வையைப் போர்த்தி மறைக்கிறார்கள். உண்மையில் கொலையில் எந்தக் கருணையும் கிடையாது. முற்றிலும் இது காட்டுமிராண்டித் தனமாகும்.

உங்களில் யாரும் மரணத்தைக் கோரிப் பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்க வேண்டிய நிலையை அடைந்தால், இறைவா! வாழ்வது எனக்கு நல்லதென்றால் வாழச் செய்! மரணிப்பது நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய்'' என்று கேட்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 5671, 6351


ஒரு முஸ்லிம் இவ்வுலகில் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறானோ அந்த அளவு மறுமையில் அவனது துன்பங்கள் குறையும் என்பது இஸ்லாம் கூறும் சித்தாந்தம். பார்க்க : புகாரி 5640, 5642, 5648, 7684

எனவே ஒருவன் என்ன தான் கஷ்டப்பட்டாலும் அதனால் அவனுக்கு மறுமையில் நன்மைகள் தான் ஏற்படப் போகின்றன. அவனுக்கு மறுமையில் கிடைக்கும் பேறுகளை கருணைக் கொலை என்ற பெயரில் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

- பி.ஜே

Monday, June 25, 2012

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்

மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.


அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

*ஏன் இந்த சிறப்பு?*

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

Wednesday, June 20, 2012

தர்ஹா வழிபாடு - PJ - தொடர் 2

மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்....

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் மக்கத்துக் காபிர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது.

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. ஒரு வகையில் பார்த்தால் இன்றைய தமிழக முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கையை விட மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கை சற்று மேலானதாக இருந்தது என்று கூறலாம்.

ஏனெனில் இன்றைய தமிழக முஸ்லிம்களில் பலர் கடுமையான துன்பம் நேரிடும் போதும், பெரிய ஆபத்தைச் சந்திக்கும் போதும் முஹ்யித்தீனே என்று அழைப்பதைக் காண்கிறோம்.

ஆனால் மக்கத்துக் காபிர்கள் சிறிய துன்பம் ஏற்படும் போதும், சிறிய அளவிலான கோரிக்கையின் போதும் மட்டுமே அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்து வந்தனர்.

மிகப் பெரிய ஆபத்தின் போது அவர்கள் அல்லாஹ்வைத் தான் அழைப்பார்கள். குட்டித் தெய்வங்களையும், மகான்களையும் மறந்து விடுவார்கள்.

இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

'இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்' என்று பணிவாகவும், இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது 'நிலம் மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?' என்று கேட்பீராக! 'இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:63, 64)
'உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!' என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். (அல்குர்ஆன் 6:40, 41)

Monday, June 18, 2012

இந்து மத சகோதரரின் ஜாதியைப் பற்றி மனக்குமுறல்கள்

 

சாதியால் பாதிக்கப்பட்ட இந்து மத சகோதரரின் மனக் குமுறல்கள்

இஸ்லாத்தில் ஜாதி இல்லை தானே...

Wednesday, June 13, 2012

மிஃராஜும், தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

அழகிய தோற்றமுடைய வமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.

இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)

இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)

Saturday, June 9, 2012

தர்ஹா வழிபாடு - PJ - தொடர் 1

இஸ்லாத்தின் அடிப்படை

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிமல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர்.

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

2. அல்லாஹ்வைத் தவிர எவரையும் வணங்கக் கூடாது.


இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாகவுள்ளனர். இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் இறந்தவர்களையும், அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும், மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர்.

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும். இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லித் தருவதற்காகவோ, அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதற்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படவில்லை. ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது.

இது கற்பனை அல்ல. தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

வரலாற்றுச் சான்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அல்லாஹ்வின் அடிமை என்பது இதன் பொருள்.

Wednesday, June 6, 2012

வரதட்சணைக்காக உறவினர் திருமணத்தை புறக்கணிக்கலாமா?

 

சொந்தங்களை அரவணைக்க வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமிய மார்க்கத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியம் நடக்கும் சொந்தங்களை அரவணைத்து திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

இஸ்லாத்தில் இதன் நிலைபாடு என்ன?

Wednesday, May 30, 2012

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்


மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.

திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்கள்

• ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள்

• மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்

• மணமக்கள் அமரும் மேடை அலங்காரம்

• வீடியோ போட்டோவுக்கான செலவுகள்

• அழைப்பிதலுக்கான செலவுகள்

• பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள்

• இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள்

• இறுதியில் விரயமாகின்ற குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு

இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை.இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை எவரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஏழை எளியவர்களும் நமக்கு துஆ செய்வார்கள்.பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.

வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26,27)

மணமகனுக்கு இவ்வநியாயத்தை எதிர்த்து போராட முடியாதா?

பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து நின்று தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அதனை சாதித்துக் கொள்வதைப் போல் இந்த அநியாயத்தையும், ஆடம்பரத்தையும், அக்கிரமத்தையும் எதிர்க்க, போராட ஏன் அவர்களுக்கு தைரியமில்லை? மணமகன் மட்டும் ஒற்றைக்காலில் நின்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இவ்வநியாயத்தை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் பல லட்ச ரூபாய்கள் வீணாவதிலிருந்தும், கொடிய நரகிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

திருமண விருந்து எப்படி அமைய வேண்டும்?

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் திருமணங்களையும் அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்த திருமணங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.ஸஹாபாக்களின் திருமணத்தின் போது அவர்கள் நபியைக் கூட அழைக்கவில்லை என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner