கேள்வி: பருவம் அடையாத சிறுமியைத் திருமணம் செய்யலாமா?
பெண்ணின் திருமணம் நிறைவேற வலி எனும் பொறுப்பாளர் தேவை என்றால் பெண்ணுக்கு இதில் உரிமை இல்லாமல் போகிறதே?
அத்துடன் இஸ்லாத்தில் தந்தை பார்க்கும் ஆணைமட்டுமே ஒரு பெண் கல்யாணம் கட்ட வேண்டும் ஏனெனில் பெண் விரும்பினால் மட்டும் போதாது அப்பெண்ணின் (guardian) வலீயும் இதற்கு சம்மதிக்க வேண்டும் இதில் பெண்ணுக்கு உரிமை உள்ளது எனக் கூறும் இஸ்லாம் அதனை (guardian) வலீ இடம் ஒப்படைத்துள்ளது.
இந்தவிடயம் சம்பந்தமாக தயவு செய்து விளக்கம் தரவும் - நஸீருத்தீன்
பதில்: சிறிய வயதுப் பெண்களையும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதையும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்துள்ளது.
சிறு வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடைவிதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறுவயதுடைய ஆயிஷா(ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன.
விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடைசெய்தது.
இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.
திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின்கடமையாகும்.
விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)
தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது.
விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாக பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 4:19)
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெறவேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப்பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், " அவளது மௌனமே அவளது சம்மதமாகும் '' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மண முடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத் திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம்(ரலி), நூல்: புகாரி 5139, 6945, 6969
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன் படிக்கையை எடுத்துள்ளார்கள். (அல்குர்ஆன்4:21)
இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர் ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவவயதை அடைந்தால்தான் ஏற்படும்.
மணவாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெறவேண்டும் என்பதை இந்த வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.
திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும்.
எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை.
இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாதகாலத்தில் நடந்த திருமணம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.
ஒரு பெண்ணுக்கு வலி எனும் பொறுப்பாளர் இருப்பது அவசியம் என்பதால் பெண்ணின் உரிமை பறிக்கப்படாது. வலி எனும் பொறுப்பாளர் பெண் விரும்பாத ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்க அனுமதி இல்லை. பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செல்லாது.
பெண்ணின் திருமணத்துக்கு பொறுப்பாளர் வேண்டும் என்று சொல்வது பெண்கள் ஏமாற்றப்படாமல் தவிர்ப்பதற்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் தான்.
- ஆன்லைன் பி.ஜே.
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...