Wednesday, January 27, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே! எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இன்ஷா அல்லாஹ் நடத்தவுள்ளது.

தலைவர்களைப் புகழ்வதற்காக,
அரசியல் ஆதாயம் அடைவதற்காக,
தங்கள் பலத்தை மற்ற இயக்கத்தினர் அறிந்து கொள்வதற்காக,
வாக்குகளைக் கவரும் உத்தியாக,
பலத்தைக் காட்டி பதவிகள் பெறுவதற்காக,
சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக -
இன்னும் இதுபோன்ற காரணங்களுக்காகவே மாநாடுகள் நடத்தப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதில் பங்கெடுத்தும் இருப்பீர்கள்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இதுபோன்ற நோக்கங்களுக்காக நடத்தப்படும் மாநாடுகளைப் போல் இருக்காது.

உலக மக்கள் பார்வையில் முஸ்லிம்களாக இருக்கும் நாம் அல்லாஹ்விடமும் முஸ்லிம்களாகக் கருதப்பட்டு மறுமையில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே இம்மாநாடு நடத்தப்படுகிறது.

இஸ்லாத்தில் அதிக ஈடுபாடு உள்ள மக்களாக இருந்தாலும் ஈடுபாடு குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்விடம் அதற்கான பரிசை எதிர்பார்த்தே செய்கிறார்கள். எப்படியாவது சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவே வணக்க வழிபாடுகளைச் செய்கிறார்கள். தான தர்மங்களைச் செய்கிறார்கள்.

செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்காமல் போவதை நாம் விரும்ப மாட்டோம். நல்லறங்கள் செய்த பின்பும், அல்லாஹ் நரகத்தில் போடுவதையும் நாம் விரும்ப மாட்டோம்.


ஆனால் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால், இந்த நிலைதான் ஏற்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். நமது தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், இன்னும் பல நல்லறங்களுக்கான நன்மைகளை நம்மை அறியாமல் இழந்து கொண்டே இருக்கிறோம்.

இதோ அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்!

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'.
(அல்குர்ஆன் 5:72)

'நீர் இணை கற்பித்தால், உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும்,உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 39:65, 66)

இந்த எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் காரியத்தையும் செய்துகொண்டு, அல்லாஹ்வுக்கு வணக்கமும் செலுத்தினால், அது நல்ல உணவை உட்கொண்டபின் உயிர்க் கொல்லி விஷத்தைச் சாப்பிடுவதற்குச் சமமானது என்று தெரியவில்லையா?

நம்மைப் படைத்தவன் அல்லாஹ். நமக்கு உணவளிப்பவன் அல்லாஹ். நம்மைக் காப்பவன் அல்லாஹ். நமக்கு செல்வத்தை வழங்குபவன் அல்லாஹ். குழந்தையைத் தருபவன் அல்லாஹ். இந்த சாதாரணமான அடிப்படையை அறியாமல் மனிதர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுக்க முடியுமா?

அல்லாஹ் தனது அதிகாரத்தை யாருக்காவது கொடுத்துள்ளானா?

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்' (என்பதைக் கூறுவீராக!)
(அல்குர்ஆன் 2:186)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:191 195)

'அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!' என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள். (அல்குர்ஆன் 46:6)

முஸ்லிம்கள் நிரந்தர நரகத்துக்குச் செல்லாத வகையில் இந்தக் கொள்கையை உரத்துச் சொல்வது தான் இம்மாநாட்டின் நோக்கம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறும் இஸ்லாத்தின் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும்போது சமுதாயம் எத்தகைய எதிர்ப்பைக் காட்டினாலும் இக்கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிரச்சாரம் செய்து வருவதன் நோக்கம் பிறருக்கு ஆத்திரமூட்டுவதற்காக அல்ல.

மாறாக உங்கள் நல்லறங்களை அழித்து நாசமாக்கும் இணை கற்பிக்கும் கொள்கையை விட்டு நீங்கள் விலகி நரகத்தில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே.

இணை கற்பித்தல் எத்தகைய மாபாதகம் என்பதையும் இணை கற்பித்தலுக்கும் தர்கா வழிபாட்டுக்கும் இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதையும் தெள்ளத் தெளிவாக இம்மாநாடு உங்களுக்கு விளக்கும்.

தலைவர்களுக்காகவும், கட்சிகளுக்காகவும் ஓடி ஓடி உழைத்தீர்கள். மறுமையில் வெற்றி பெற நாம் கொண்டிருக்கும் கொள்கை சரியா என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக விளக்கும் இம்மாநாட்டுக்கு, உங்களுக்காக உங்களின் மறுமை வெற்றிக்காக நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்று பயன் பெறுமாறு அழைக்கிறோம்.

அனைத்து முஸ்லிம் கட்சிகளையும், இயக்கங்களையும் அனைத்து ஜமாஅத்துகளையும் இம்மாநாட்டில் பங்கேற்று மார்க்கத்தை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள அலைகடலெனத் திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவண் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner