Sunday, March 8, 2015

மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா? - குர்ஆன் விளக்கங்கள் பி.ஜே

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில்  தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் (2:267)

இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது நாம் பயன்படுத்திய பொருட்களையும் பழைய பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளது.

ஆனால் இவ்வசனம் அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணி இவ்வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை விளக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் இருந்து அகதிகளாக வந்த சிலர் பள்ளிவாசலிலேயே தங்கி இருந்தனர். மதீனா நகரத்தில் பேரீச்சை விவசாயம் செய்து வந்த நபித்தோழர்கள் கனிகள் விளைந்து அறுவடை செய்யும் போது அதில் ஓரிரு குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள்.

ஏழைகளும் பள்ளிவாசலில் தங்கியிருந்த நபித்தோழர்களும் தேவைப்படும் போது எடுத்து அதை உண்பார்கள். மதீனாவில் நன்மையான காரியங்களுக்குச் செலவிடாத சிலர் இருந்தனர். இவர்கள் அறுவடை செய்யும் போது உண்ணத்தகாதவை என ஒதுக்கப்பட்ட குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள். யாருமே சாப்பிட முடியாத பொருட்களைக் கொண்டு வந்து தாங்களும் தர்மம் செய்ததாகக் காட்டிக் கொண்ட இவர்களைக் கண்டித்துத் தான் இவ்வசனம் அருளப்பட்டது. (பார்க்க : திர்மிதி)

நமக்கு அதை அன்பளிப்பாகக் கொடுத்தால் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் தவிர நாம் வாங்க மாட்டோம் என்ற தரத்தில் அப்பொருள் இருந்தால் அதை நாம் தர்மம் செய்யக் கூடாது. நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டால் அதை வாங்கிக் கொள்வோம் என்றால் அது போன்ற பொருட்களை தர்மம் செய்யலாம்.

நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் (3:92)

இவ்வசனம் (3:92) நாம் விரும்புவதைத் தர்மம் செய்துவிட வேண்டும் என்ற கருத்தைத் தருவதுபோல் சிலருக்குத் தோன்றலாம்.

நாம் விரும்பும் பொருட்களைத் தான் தர்மம் செய்ய வேண்டும்; விரும்பாத பொருட்கள் நம்மிடம் இருந்தால் அதைத் தர்மம் செய்யக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

அதுபோல் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் தர்மம் செய்து விட வேண்டும் எனவும் இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடாது.

தர்மம் செய்வதாக இருந்தால் எது நமக்குப் பிடிக்கவில்லையோ அவற்றை மட்டும் தர்மம் செய்வது சிலரது தயாள குணமாக உள்ளது. ஒரு பொருள் பிடிக்காமல் போனால் மட்டுமே தர்மம் செய்வதும் மனதுக்குப் பிடித்த ஒரு பொருளையும் தர்மம் செய்யாமல் இருப்பதும் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.

நீங்கள் விரும்பும் பொருட்களிலிருந்து என்பதற்கும், நீங்கள் விரும்பும் பொருட்களை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

விரும்பும் பொருட்களிலிருந்து என்றால் நாம் விரும்பும் பொருட்களில் சிலவற்றையாவது என்ற கருத்தைத்தான் இது தரும்.

நமக்குப் பிடிக்காத நல்ல பொருட்களை நாம் தர்மம் செய்யலாம். அது கெட்ட செயல் அல்ல.

அல்லாஹ்வுக்காக நாம் தர்மம் செய்கிறோமா? நமக்குப் பிடிக்காத பொருள் என்பதற்காக தர்மம் செய்கிறோமா? என்பதற்கு அல்லாஹ் ஒரு சோதனை வைக்கிறான்.

தனக்குப் பிடிக்காத பொருட்களை தர்மம் செய்வதுடன் தனக்குப் பிடித்த சில பொருட்களையும் ஒருவன் தர்மம் செய்தால் அவன் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்தவனாகிறான்.

அவன் தர்மம் செய்த அனைத்துமே அவனுக்குப் பிடிக்காத பொருட்களாக மட்டுமே இருந்தால் அவன் அல்லாஹ்வுக்காகச் செய்யவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவே செய்கிறான் என்று கருதப்படுகிறான்.

இந்த அடிப்படை விஷயத்தைத் தான் நீங்கள் விரும்பக்கூடிய பொருட்களிலிருந்து என்ற சொல் மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner