Tuesday, February 3, 2015

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 17 - பி.ஜே

சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தை நாம் சொல்லும் போது சூனியத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற கருத்தில் உள்ளவர்கள் பல எதிர்வாதங்களை வைக்கிறார்கள்.

முஃதஸிலா என்ற ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் முன்பே புறக்கணிக்கப்பட்டவர்கள்.

இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.

இப்போது சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் சூனியத்தை மறுக்கும் நம்மைப் பார்த்து ”இவர்கள் சொல்வது முஃதஸிலாக் கொள்கை. முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை நம்ப மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் புதிதாக மக்களிடம் இந்தக் கொள்கையைத் திணித்து மக்களைக் குழப்புகின்றனர் என்றும் சூனியக் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கொள்கை தவறு என்று இவர்கள் கருதினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதம் சரியல்ல என்று ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்வதில் நமக்கு மறுப்பு இல்லை. அந்தப் பிரச்சாரம் எடுபடாமல் தமது கூடாரம் காலியாகிறது என்று அவர்கள் அஞ்சினால் விவாதத்தின் மூலம் இதற்கு ஒரு முடிவு காண அவர்கள் முயல வேண்டும்.

ஆனால் தங்களுடன் இருப்பவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் முஃதசிலா கொள்கை உடையவர்கள் என்று கூறி மக்களின் சிந்தனைக்கு திரை போடுகின்றனர்.


முஃதசிலா என்ற வழிகெட்ட பிரிவினர் சூனியத்தை மறுத்தார்கள் என்பது உண்மை. ஆனால் சூனியத்தை மறுத்ததால் தான் இவர்கள் வழிகெட்டவர்களாக கருதப்பட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்களின் அற்புதங்களை மறுத்தது உள்ளிட்ட பல கெட்ட கொள்கைகள் காரணமாகவே அவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டனர்.

முஃதசிலாக்களைக் கடுமையாக எதிர்த்த அறிஞர்கள் பலரும் சூனியத்தை மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் முஃதசிலாக்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆம்! சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று முஃதசிலாக்கள் மட்டும் சொல்லவில்லை. முஃதசிலாக்களை எதிர்த்த நல்லறிஞர்களும் சூனியம் என்பது வெறும் கற்பனையே என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் இவர்கள் மறைக்கின்றனர்.

புஹாரி நூலுக்கு ஏராளமான விரிவுரை நூல்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை இரண்டு நூல்கள் தான். ஒன்று இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய பத்ஹுல்பாரி. மற்றொன்று ஐனி அவர்கள் எழுதிய உம்ததுல் காரி. பத்ஹுல் பாரியை ஷாபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். உம்ததுல் காரி நூலை ஹனபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். புகாரியில் உள்ள ஹதீசுக்கு மாற்றமாக ஹனபி மத்ஹப் சட்டம் இருந்தால் ஐனி எப்படி சமாளிக்கிறார் என்று அறிந்து கொள்ள உம்ததுல் காரியைத்தான் ஹனபிகள் புரட்டுவார்கள்.

இந்த இரண்டு நூல்களிலும் சொல்லப்படுவதைப் பாருங்கள்.

இப்னு ஹஜர் தமது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் சொல்வதைப் பாருங்கள்!

فتح الباري - ابن حجر - (10 / 222)

واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قال النووي والصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى

சிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வெறும் கற்பனை தான்; அது உண்மையில்லை  என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபில் மரியாதைக்குரிய அறிஞராக இருந்த அபு ஜஃபர் என்பவரின் கருத்து இதுதான். ஹனபி மத்ஹபின் அறிஞரான அபுபக்கர் ராசீ அவர்களின் கருத்தும் இதுதான். இப்னு ஹஸ்ம் அவர்களின் கருத்தும் இதுதான். (குர்ஆன் ஹதீஸ்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வியாக்கியானங்களும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வழிகெட்ட கொள்கைக்கு சிம்ம சொப்பனமாகக் கருதப்பட்டவர் இப்னு ஹஸ்ம் அவர்கள்.) இன்னும் ஒரு தொகையினரின் கருத்தும் இதுதான். சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தான் பெரும்பாலோர் உள்ளனர். இதைத்தான் குர்ஆன் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன என்று நவவி கூறுகிறார்.

நான்கு மத்ஹபுக்காரர்களும் முஃதசிலாக் கொள்கையை எதிர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஷாபி, ஹனபி மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் முஃதசிலாக்களை எதிர்த்த இப்னு ஹஸ்ம் அவர்களும் சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று சொல்லியுள்ளதாக இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார்.  இவ்வாறு சொன்னதற்காக மேற்கண்ட அறிஞர்களை முஃதசிலாக்கள் என்று இப்னு ஹஜர் சொல்லவில்லை. ஒன்று அதிகமானவர்களின் கருத்து; இன்னொன்று குறைவானவர்களின் கருத்து எனக் கூறுகிறாரே தவிர அவர்களை முஃதசிலாக்கள் என்று சொல்லவில்லை.

அது போல் ஹனபி மத்ஹபின் முக்கிய அறிஞரான ஐனி அவர்கள் உம்ததுல் காரி நூலில் கூறுவதைப் பாருங்கள்.

عمدة القاري شرح صحيح البخاري (14/ 62)

الأول: إِن السحر لَهُ حَقِيقَة، وَذكر الْوَزير أَبُو المظفر يحيى بن مُحَمَّد بن هُبَيْرَة فِي كِتَابه (الْأَشْرَاف على مَذَاهِب الْأَشْرَاف) : أَجمعُوا على أَن السحر لَهُ حَقِيقَة إلاَّ أَبَا حنيفَة. فَإِنَّهُ قَالَ: لَا حَقِيقَة لَهُ. وَقَالَ الْقُرْطُبِيّ: وَعِنْدنَا أَن السحر حق، وَله حَقِيقَة يخلق الله تَعَالَى عِنْده مَا شَاءَ، خلافًا للمعتزلة وَأبي إِسْحَاق الإسفرايني من الشَّافِعِيَّة، حَيْثُ قَالُوا: إِنَّه تمويه وتخيل

சூனியம் பற்றி முதல் கருத்து அது உண்மைதான் என்பதாகும். சூனியம் உண்மையான ஒன்று  என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார். சூனியம் மெய்யானது; அல்லாஹ் நாடும் போது நாடியதைப் படைப்பான் என்பது தான் என்பது தான் நம்முடைய கருத்து. முஃதசிலாக்களும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ இஸ்ஹாக் இஸ்பிராயீனி அவர்களும் இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளனர். சூனியம் என்பது பொய்த்தோற்றமும் முலாம் பூசுதலும் தான் என்று இவர்கள் கூறுகின்றனர் என குர்துபீ கூறுகிறார்.

இவ்வாறு உம்ததுல் காரியில் சொல்லப்பட்டுள்ளது. அபூ ஹனீபா இமாமும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூஇஸ்ஹாக் அவர்களும் முஃதசிலாக்களா?

இதே கருத்தை இப்னு கசீர் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்.


تفسير ابن كثير ت سلامة (1/ 371)

[فَصْلٌ] (10) وَقَدْ ذَكَرَ الْوَزِيرُ أَبُو الْمُظَفَّرِ يَحْيَى بْنُ هَبيرة بْنِ مُحَمَّدِ بْنِ هُبَيْرَةَ فِي كِتَابِهِ: "الْإِشْرَافُ عَلَى مَذَاهِبِ الْأَشْرَافِ" بَابًا فِي السِّحْرِ، فَقَالَ: أَجْمَعُوا عَلَى أَنَّ السِّحْرَ لَهُ حَقِيقَةٌ إِلَّا أَبَا حَنِيفَةَ، فَإِنَّهُ قَالَ: لَا حَقِيقَةَ لَهُ عِنْدَهُ

சூனியம் பற்றி முதல் கருத்து அது முற்றிலும் உண்மை என்பதாகும். சூனியம் உண்மை என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார்.

இப்னு ஹஜர் போன்று இதே காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் இப்னு தைமிய்யா அவர்கள்.

இப்னு தைமிய்யா அவர்கள் அல் ஃபுர்கானு பைன அவ்லியாயிஷ் ஷைத்தான் வ அவ்லியாயிர் ரஹ்மான் என்ற நூலில் எடுத்துக் காட்டுவதைப் பாருங்கள்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان - (1 / 15)

9 - اخْتَلَفَ الْعُلَمَاءُ فِي أَنَّ السِّحْرَ هَل لَهُ حَقِيقَةٌ وَوُجُودٌ وَتَأْثِيرٌ حَقِيقِيٌّ فِي قَلْبِ الأَْعْيَانِ ، أَمْ هُوَ مُجَرَّدُ تَخْيِيلٍ ؟.فَذَهَبَ الْمُعْتَزِلَةُ وَأَبُو بَكْرٍ الرَّازِيُّ الْحَنَفِيُّ الْمَعْرُوفُ بِالْجَصَّاصِ ، وَأَبُو جَعْفَرٍ الإِْسْتِرَابَاذِيُّ وَالْبَغَوِيُّ مِنَ الشَّافِعِيَّةِ ، إِلَى إِنْكَارِ جَمِيعِ أَنْوَاعِ السِّحْرِ وَأَنَّهُ فِي الْحَقِيقَةِ تَخْيِيلٌ مِنَ السَّاحِرِ عَلَى مَنْ يَرَاهُ ، وَإِيهَامٌ لَهُ بِمَا هُوَ خِلاَفُ الْوَاقِعِ ، وَأَنَّ السِّحْرَ لاَ يَضُرُّ إِلاَّ أَنْ يَسْتَعْمِل السَّاحِرُ سُمًّا أَوْ دُخَانًا يَصِل إِلَى بَدَنِ الْمَسْحُورِ فَيُؤْذِيهِ ، وَنُقِل مِثْل هَذَا عَنِ الْحَنَفِيَّةِ ، وَأَنَّ السَّاحِرَ لاَ يَسْتَطِيعُ بِسِحْرِهِ قَلْبَ حَقَائِقِ الأَْشْيَاءِ ، فَلاَ يُمْكِنُهُ قَلْبُ الْعَصَا حَيَّةً ، وَلاَ قَلْبُ الإِْنْسَانِ حِمَارًا .

சூனியம் என்பது உண்மையா என்பதிலும் அப்படி ஒன்று உண்டா என்பதிலும், ஒரு பொருளை வேறு பொருளாக சூனியத்தின் மூலம் மாற்ற முடியுமா என்பதிலும் அது முற்றிலும் கற்பனையா என்பதிலும் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முஃதசிலா பிரிவினரும், ஜஸ்ஸாஸ் என்று அறியப்படும் ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூ பக்ர் ராஸீ அவர்களும், ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர் பகவீ, அபூ ஜஃபர் இஸ்திர்பாதி ஆகியோரும் சூனியத்தின் அனைத்து வகைகளையும் மறுத்துள்ளனர். சூனியம் என்பது இல்லாததை இருப்பது போல் காட்டுவதும், பொய்த்தோற்றமும் ஆகும். சூனியம் வைக்கப்பட்டவனுக்குள் விஷம் அல்லது புகை போன்றவற்றைச் செலுத்தினாலே தவிர சூனியத்தால் ஒன்று செய்ய முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனபி மத்ஹபினரின் கருத்து இதுதான் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சூனியக்காரன் ஒரு பொருளின் தன்மையை மாற்ற முடியாது. கைத்தடியைப் பாம்பாக மாற்ற முடியாது. மனிதனைக் கழுதையாக ஆக்க முடியாது என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

என்று இப்னு தைமியா அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இப்படிச் சொன்ன அறிஞர்களை இப்னு தைமியா அவர்கள் முஃதசிலா என்று சொல்லவில்லை. அவர்களும் அறிஞர்கள் தான் என்று சொல்கிறார். இப்னு தைமியா அவர்கள் குறிப்பிடுகின்ற பகவி அவர்கள் ஹதீஸ்களை நிலைநாட்டப் பாடுபட்டவர் என்பதால் முஹ்யிஸ் ஸுன்னா (நபிவழியை உயிர்ப்பித்தவர்) என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். சூனியம் சம்மந்தமான செய்திகளை அவர் மறுத்ததால் முஹ்யிஸ் ஸுன்னா என்ற அடைமொழியை நீக்கி முஃதசிலா பட்டத்தை யாரும் இவருக்குக் கொடுக்கவில்லை.

போலி மார்க்க அறிஞர்களுக்கு சூனியம் என்பது சம்பாதிக்க உதவுவதாலும், சூனியம் வைத்து விடுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த இது உதவுவதாலும் சூனியத்துக்கு தாக்கம் உண்டு என்ற கருத்து அதிக அளவில் சென்றடைந்து விட்டது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹனபி மத்ஹபினரே இருந்தும் அவர்கள் சூனியத்தை நம்புகிறார்கள். அபூஹனீபா இமாம் சூனியம் என்பது கற்பனை என்று கூறி இருந்தும் இப்படி நம்புகிறார்கள் என்றால் போலி ஆலிம்கள் சூனியத்திற்கு ஆற்றல் உள்ளது என்று பிரச்சாரம் செய்ததே காரணம்.

சூனியத்தினால்  ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்பவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இதனால் இந்தக் கருத்து குறைவாகவே மக்களிடம் சென்றடைந்துள்ளது.

முஃதசிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுக்கவில்லை. இப்போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று சொல்பவர்களின் வாதங்கள் அனைத்தும் மேலே சொன்ன ஆதாரங்களால் பொய் என நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஷாபி, ஹனபி மதஹபினர் நட்த்தும் அனைத்து அரபி மதரஸாக்களிலும் பட்டம் பெறும் ஏழாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடநூலாக பைழாவி என்ற தஃப்சீர் சொல்லித் தரப்படுகிறது.

இந்த தஃப்சீரில் ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தாலும், இவர்கள் பாடம் நடத்தும் இந்த தஃப்சீரில் சூனியத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றது என்று பார்க்கலாம்.

تفسير البيضاوي = أنوار التنزيل وأسرار التأويل (4/ 138)

فَأُلْقِيَ السَّحَرَةُ ساجِدِينَ لعلمهم بأن مثله لا يتأتى بالسحر، وفيه دليل على أن منتهى السحر تمويه وتزويق يخيل شيئاً لا حقيقة له

மூஸா நபி அற்புதம் செய்து காட்டியவுடன் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர் என்று 26:46 வசனம் கூறுகிறது. மூஸா நபி செய்தது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது என்று அவர்கள் அறிந்ததால் ஸஜ்தாவில் விழுந்தனர்.  சூனியம் என்பது போலித்தோற்றம் முலாம் பூசுதல், அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.

பைளாவி முஃதசிலா கொள்கை உடையவரா? முஃதசிலா கொள்கை உடையவரின் நூலைத்தான் பட்டப்படிப்புக்கு பாட நூலாக வைத்துள்ளார்களா?

تفسير البيضاوي = أنوار التنزيل وأسرار التأويل (3/ 121)

فَلَمَّا أَلْقَوْا قالَ مُوسى مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ أي الذي جئتم به هو السحر لا ما سماه فرعون وقومه سحراً. وقرأ أبو عمرو السِّحْرُ على أن مَا استفهامية مرفوعة بالابتداء وجئتم به خبرها والسِّحْرُ بدل منه أو خبر مبتدأ محذوف تقديره أهو السحر، أو مبتدأ خبره محذوف أي السحر هو. ويجوز أن ينتصب ما بفعل يفسره ما بعده وتقديره أي شيء أتيتم. إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ سيمحقه أو سيظهر بطلانه. إِنَّ اللَّهَ لاَ يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ لا يثبته ولا يقويه وفيه دليل على أن السحر إفساد وتمويه لا حقيقة له.

சூனியக்காரர்கள் சூனியத்தைச் செய்ததைப் பார்த்த மூஸா நபியவர்கள், நீங்கள் செய்தது சூனியம். அல்லாஹ் அதை தோற்கடிப்பான். வீனர்களின் செயலுக்கு அல்லாஹ் வெற்றியளிக்க மாட்டான் என்று கூறியதாக 10:81 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான். சூனியம் என்பது குழப்பம் ஏற்படுத்துதலும் இல்லாததை இருப்பதாகக் காட்டுதலும் தான் என்பதற்கும் அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கும் இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.

என்று தப்சீர் பைளாவியில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இவரை ஏன் முஃதசிலா என்று ஒருவரும் சொல்லவில்லை?

மவ்லவி பட்டப்படிப்பில் ஏழாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு  குர்ஆன் விரிவுரை நூலாக இதைத்தானே ஆலிம்கள் படித்தார்கள்? பைளாவில் ஆதாரம் இல்லாமல் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொண்ட மார்க்க அறிஞர்கள் பைளாவி தக்க ஆதாரத்துடன் சொன்ன உண்மையை மட்டும் மறுப்பது ஏன்?

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner