Sunday, November 30, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 1 - பி.ஜே



பில்லி, சூனியம், ஏவல், மாயம், மந்திரம் என்று சொல்லப்படும் ஸிஹ்ர் பற்றி நாம் பார்க்க இருக்கின்றோம்.

சூனியத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது.

அதன் மூலம் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா?

அல்லது அது வெறும் ஏமாற்று வித்தையா?

இதில் கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் என்ன?

அப்படி பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று நம்பினால், அதை நாம் செய்யலாமா?

இது போன்ற பல சந்தேகங்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றன.

சிஹ்ர் எனும் எனும் சூனியத்தைப் பற்றி அறிவதற்கு முன்னால் சில அடிப்படையான செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இம்மார்க்கத்தை அல்லாஹ் இரண்டு வகையாக நமக்குத் தந்திருக்கின்றான்.

முதலாவது ஈமான் எனும் நம்பிக்கை. இரண்டாவது இஸ்லாம் எனும் செயல்பாடுகள்.

ஈஈமான் இவ்விரு சொற்களின் நேரடி பொருளில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஈமான் என்றால் நம்புதல் என்று பொருள். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல் என்பது பொருள்.

அல்லாஹ்வைப் பற்றியும், வானவர்களைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும், தூதர்களைப் பற்றியும், இறுதி நாளைப் பற்றியும், விதியைப் பற்றியும் எப்படி நம்பவேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்புவது ஈமான் எனப்படும்.

இவ்வாறு நம்பிக்கை கொண்ட பின் நாம் அவசியம் செய்ய வேண்டிய செயல்பாடுகளைச் செய்வது இஸ்லாம் எனப்படும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டையும் இவ்வாறு வேறுபடுத்திக் காட்டியுள்ளதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து நாம் அறியலாம்.
، وَقَالَ: يَا مُحَمَّدُ، أَخْبِرْنِي عَنِ الإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ : " الإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ  وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلًا "، قَالَ: صَدَقْتَ، قَالَ: فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ، وَيُصَدِّقُهُ، قَالَ: فَأَخْبِرْنِي عَنِ الإِيمَانِ، قَالَ: " أَنْ تُؤْمِنَ بِاللَّهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ "

பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரியவில்லை. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முட்டுக்கால்களை நபியவர்களின் முட்டுக்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்தார்.

பிறகு "முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் "ஹஜ்' செய்வதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் "உண்மைதான்'' என்றார்.

அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், "ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மைதான்'' என்றார்.

நூல் முஸ்லிம் 1


மனதில் நம்புவதை ஈமான் என்றும் வணக்க வழிபாடுகளை இஸ்லாம் என்றும் நபிகள் நாயகம் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

இஸ்லாம் என்ற செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் அல்லாஹ் அதனை மன்னித்து விடுவான்.

ஈமானில் குறைபாடு இருந்தால் அல்லாஹ் அதனை மன்னிக்க மாட்டான்.

தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற இன்ன பிற அனைத்து காரியங்களிலும் ஒருவன் சரியாக இருந்து விட்டு, அல்லாஹ்வைப் பற்றி சரியான நம்பிக்கை இல்லாவிட்டால் அவனது செயல்களுக்கு எந்த விதக் கூலியையும் அல்லாஹ் கொடுக்க மாட்டான்.

சூனியம் என்பது நம்பிக்கை பற்றிய விஷயமாகும். சூனியத்தால் எதுவும் செய்ய முடியும் என்று நாம் நம்பினால் அந்த நம்பிக்கை, அல்லாஹ்வைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும் நாம் கொள்ள வேண்டியை நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? என்று கவனமாக இதை அணுக வேண்டும்.

சிலரை நல்லடியார்கள் என்று ஒருவன் நம்பி அவர்களிடத்தில் அல்லாஹ்விடம் கேட்பது போல் உதவி கேட்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவனது மனதில் அல்லாஹ் ஒருவன் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. இன்னொரு பக்கம் நல்லடியார்களும் வணக்கத்திற்கு உறியவர்கள்தான் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

இந்த இரண்டு நம்பிக்கையும் மோதுவதாலும், முரண்படுவதாலும் அல்லாஹ்வை அவன் சரியாக நம்பவில்லை என்ற நிலை ஏற்படுகிறது.

இம்மார்க்கம் ஈமான், இஸ்லாம் என இருவகைகளாக நமக்குத் தரப்பட்டுள்ளது என்பதைப் பின் வரும் வசனத்தில் இருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.

"நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக "கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 49:14


பின்வரும் வசனத்தில் இருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.

திருக்குர்ஆன் 16:106


ஈமான் எனும் நம்பிக்கை உறுதியாக இருக்கும் நிலையில் ஏதோ ஒரு அச்சுறுத்தலுக்காக வாயளவில் ஒருவன் இறை நம்பிக்கையைப் பாதிக்கும் சொல்லைக் கூறினால் அவன் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனம் கூறுகிறது. வெளிப்படையாக ஒருவன் சொல்வது தவறான சொற்களாக இருந்தும் அவனது நம்பிக்கை உறுதியாக இருக்கும் போது அவனது மறுமை வாழ்வு பாதிப்பதில்லை.

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று சரியான சொல்லைக் கூறும் ஒருவன் அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்கினால் அவன் சரியான சொல்லைச் சொன்னது அவனது மறுமை வாழ்வுக்கு உதவாமல் போய்விடும்.

சிஹ்ர் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருப்பதால் மேலே குறிப்பிட்ட குர்ஆன், ஹதீஸை மனதில் கொண்டு சிஹ்ரைப் பற்றிய நம்பிக்கையை நாம் முடிவு செய்ய வேண்டும்.

சிஹ்ர் எனும் சூனியம் சம்பந்தமாக அதிகமான மார்க்க அறிஞர்கள் இதன் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கருத்தில் உள்ளனர்.

ஒருவனது புத்தியை மழுங்கச் செய்யலாம்.

கணவன், மனைவியைப் பிரித்து விடலாம்.

ஒருவனது கை, கால்களை முடக்கலாம்.

இப்படித்தான் அதிகமான அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சூனியத்தின் மூலம் செத்தவனுக்கு உயிர் கொடுக்கலாம் என்று சொல்பவர்களும் உள்ளனர்.

இப்படியாக நம்புவதற்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களையும், ஹதீஸையும் எடுத்துக் காட்டுவார்கள்.

இன்னொரு சாரார் இதை மறுக்கின்றனர்.

சிஹ்ர் என்பது ஏமாற்று வேலை என்றும் இதன் மூலம் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்றும் இல்லாத ஒன்றை உருவாக்கவோ இருப்பதை அழிக்கவோ முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்

இவ்வாறு கூறுவோர் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். இவர்களும் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

இரண்டு சாராருமே குர்ஆன், ஹதீஸை வைத்துத்தான் ஆதரிக்கவும், மறுக்கவும் செய்கின்றார்கள்.


திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதமாக உள்ளதால் அதில் முரண்பட்ட இரு கருத்துக்கள் இருக்க முடியாது. புரிந்து கொள்வதில் சிலருக்கு தெளிவில்லாத காரணத்தால் தான் முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் குர்ஆன் இடம் தருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ முரண்பாடு உள்ளது போல் தோன்றினால் அதை எப்படி சீர்படுத்திக் கொள்வது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

இதற்கு பொதுவான ஒரு அடிப்படை உள்ளது. அந்த அடிப்படை இதுதான்.

திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம். இம்மார்க்கம் அல்லாஹ்வுடைய மார்க்கம். அனைத்தையும் அறிந்த ஒருவனால் இந்த மார்க்கம் தரப்பட்டுள்ளது.

எதிரிகளாலும் நேர்மையானவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாக மக்களுக்கு அருளப்பட்டது.

இப்படிப்பட்ட இந்த மார்க்கத்தில் முரண்பாடுகளோ, கிறுக்குத்தனங்களோ இருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் குர்ஆனை அணுக வேண்டும்.

அல்லாஹ் என்பவனுக்கு ஒரு தகுதி உள்ளது. மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா என்று நினைக்கும் எந்த விளக்கத்தையும் குர்ஆனுக்குக் கொடுக்கக் கூடாது.

எந்த வசனத்தைப் புரிந்து கொள்வதாக இருந்தாலும் அதைச் சொன்னவனின் தகுதியையும் அறிவையும் ஆற்றலையும் கவனத்தில் கொண்டு அவனது அறிவாற்றலுக்கு ஏற்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் படைத்தான். அதற்காகத் தான் மனிதர்களில் இருந்தே தூதர்களை அனுப்பி கற்றுத் தந்தான். நான் எஜமான் நீங்கள் அடிமைகள் என்பதுதான் ஒட்டு மொத்த திருகுர்ஆனின் சாரமாகும்.

ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் வணங்கலாம் என்று திசை திருப்பும் வகையில் இருந்தாலும் அப்படி அதை விளங்கக் கூடாது. அல்லாஹ் ஒரு போதும் தன்னைத் தவிர மற்ற யாரையும் வணங்குமாறு கூறவே மாட்டான் என்பதற்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்கு கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, இறைத் தூதர்களை மக்கள் தூதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் சில அற்புதங்களைக் கொடுக்கிறான். அல்லாஹ்வால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்கள் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டதால் அவர்களுக்கும் அல்லாஹ்வின் ஆற்றல் போன்ற ஆற்றல் உண்டு என்று விளங்கக் கூடாது. அப்படி விளங்கினால் அல்லாஹ்வுக்கே உள்ள தகுதியும் தனிப்பெருமையையும் நாம் மறுத்தவர்களாக நேரும்.

இறைத்தூதர்களாக இல்லாத சில நல்லடியார்களிடமும் சில அதிசயங்கள் நிகழ்ந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

அப்போது தான் ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

திருக்குர்ஆன் 3:37,38

இந்தச் சம்பவத்தை குர்ஆனில் பார்த்துவிட்டு, மர்யம் (அலை) அவர்களுக்கு அதிசயமான முறையில் அல்லாஹ்விடமிருந்து நேரடியாக உணவு கிடைத்தது என்பதால் பெரியார்களிடம் கேட்டால் தருவார்கள் என்று விளங்கக் கூடாது.

குர்ஆனில் சொல்லப்பட்ட எந்த சம்பவமாக இருந்தாலும்,  லாயிலாஹ இல்ல்ல்லாஹ் எனும் அடிப்படைக்கு  உட்பட்டுத்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். அதற்கு எதிராக விளக்கம் கொடுக்கக் கூடாது.

அதுபோல் ஒட்டு மொத்த குர்ஆனுடைய சாரம் மனிதர்கள் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்பதாகும். ஒழுக்கத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நிலைபாட்டையும் திருக்குர்ஆன் கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner