Wednesday, March 25, 2015

குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் - விளக்கங்கள் பி.ஜே

1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார்.  அலட்சியம் செய்தார்.

3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.

5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.

7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.

8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.

12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.

(அல்குர்ஆன் 80:1-12)

இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ். இவர் கண் தெரியாதவர். அன்றைய சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டவர். ஆரம்ப கால முஸ்லிம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர் குலத்தாரோடு பேசிக் கொண்டிருக்கும் சபைக்கு இவர் வந்து நபிகள் நாயகத்துக்கு ஸலாம் கூறுகிறார்.

"உயர் குலத்தவர்களோடு பேசும்போது, இந்தச் சாதாரண மனிதர் வந்து இடையூறு செய்கிறாரே'' என்று நபிகள் நாயகத்திற்குக் கோபம் வந்து முகத்தைச் சுளித்து விடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோபம் அடைந்ததோ, முகத்தைச் சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது.

ஆனால், உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.

உம்மை ஆர்வத்தோடு தேடி வருகிற இவரை உயர் குலத்தவர்களுக்காக விரட்டியடிக்கிறீரா? என்று அல்லாஹ் நபிகள் நாயகத்தைக் கண்டிக்கிறான். இதைக் கண்டித்த பிறகு தான் அந்தக் குருடருக்கே இந்தச் செய்தி தெரிகிறது.

இது ஒரு உண்மையை நமக்குச் சொல்கிறது.

குர்ஆனை முஹம்மது நபி, தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.

காலாகாலத்திற்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இது போன்று உருவாக்காமல் இருந்திருப்பார்கள்.

இது இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதால்தான் அந்தக் குருடர் மத்தியிலும், தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் "அல்லாஹ்வே என்னைக் கண்டித்து விட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய அறிவுப்பூர்வமான சான்றாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

அது மட்டுமின்றி நபிகள் நாயகமே ஆனாலும் அவர்கள் இறைவன் விரும்பாததைச் செய்வதற்கு அதிகாரம் இல்லை.

செய்பவர் யார் என்று பார்த்து அல்லாஹ் நீதி வழங்க மாட்டான்; செய்யப்படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.


ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே அல்லாஹ் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிடைக்கும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இதன் பிறகு அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் நாம் பார்க்க முடிகிறது.

Monday, March 16, 2015

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

கேள்வி - நான் லண்டனில் வசித்து வருகிறேன் ,இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன் .ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும் என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள் . மேலும் அவர்களை விட எனக்குச் சோதனை அதிகமாகவும் நெருக்கடி அதிகமாகவும் உள்ளன. சமயத்தில் எனக்கு அவர்களைப் போல் இருந்து விடலாம் போலும் தோன்றுகிறது .இந்நிலையில் நான் என்ன செய்வது? தயவு செய்து நல்ல விளக்கம் தரவும்,எனக்காக துவா செய்யவும் . - இப்ராஹிம்

பதில் பி.ஜே - உலகில் நல்லவனாக வாழ்வது கஷ்டமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் தடம் புரள்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

எனவே இது குறித்து மனதை ஆறுதல்படுத்தி நல்வழியில் மேலும் உறுதியுடன் நடக்க கீழ்க்காணும் ஆக்கங்களைப் பார்க்கவும்.

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/muslimkal_thunburuvathu_ethanal/

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/nallavarkal_noyal_avathiyuruvathu_en/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/ulakil_kastapatal_marumai_vetri/

பொதுவாக இந்த உலகம் இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக் குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5663


சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்று தான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.

இறைவனுக்கு மாறு செய்பவர்கள் இவ்வுலகில் நன்றாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும் மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் கிடைக்காமல் இருப்பதற்காகத்தான் இறைவன் அவர்களுக்கு வாரி வழங்குகிறான். இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் முஃமின்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான்.

(ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

அல்குர்ஆன் 3 : 196 – 198


யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.

நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2 : 155, 156, 157


இவ்வுலகின் வறுமை போன்ற துன்பங்களைக் காட்டி ஷைத்தான் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வற்கு முயற்சி செய்வான். நாம் ஒருபோதும் ஷைத்தானின் மாயவலையில் வீழ்ந்து விடக் கூடாது.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2 : 268


இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான்

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. ''இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 2 : 14, 15


பெரும்பாலும் இவ்வுலகில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் மனிதர்கள் மார்க்கம் தடை செய்த காரியங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது.

பணம் சம்பாதிக்கும் விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் மிகச் சிறந்த உபதேசத்தை நமக்குச் செய்துள்ளார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) இறைவன் உங்களுக்காக வெளிக்கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். பூமியின் வளங்கள் எவை? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை) என்று பதிலளித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா? என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் கேள்வி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். அம்மனிதர் (இதோ) நான் (இங்கிருக்கிறேன்) என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம். நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன. இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

நூல் : புகாரி 6427


அல்லாஹ்விற்கு அஞ்சி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நன்னோக்கத்தில் வாழ்ந்தால் யாரும் நம்மை வழிகெடுத்துவிட முடியாது. உள்ளம் நேர்வழியின் மீது நிலைத்திருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

அல்குர்ஆன் 3: 8

Tuesday, March 10, 2015

முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்?

கேள்வி - முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்? - சுரேஷ் பாபு

பதில் பி.ஜே - இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். அதன் பின்னர் தனது வாழ்க்கையை திருக்குர் ஆன் போதனைபடியும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைஒத்துக் கொண்டால் அவர் முழுமையான முஸ்லிமாக ஆவார்

3861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டிய போது தம் சகோதரரிடம், இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விபரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா! என்று சொன்னார்கள்.

உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, அவர் நற்குணங்களைக் கைக்கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற்றேன்). அது கவிதையாக இல்லை என்று சொன்னார். அபூ தர், நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை என்று கூறிவிட்டு, பயணச் சாதம் எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. 

இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ -ரலி- அவர்கள் அபூதர்ரிடம், வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்ல) அபூதர், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும் வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல் பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். 

அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா? என்று கேட்டு விட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்த போது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்க வைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார்கள். 

அவர், (நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன் என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி) அவர்கள், அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போல நின்று கொள்வேன். 

நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள் என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்த போது அவர்களுடன்அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களுடைய சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். 

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொன்னார்கள். அபூதர், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறை மறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன் என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி சொல்கிறேன் என்று சொன்னார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். 

அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவர் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.

நூல் புஹாரி 3861

Sunday, March 8, 2015

மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா? - குர்ஆன் விளக்கங்கள் பி.ஜே

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில்  தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் (2:267)

இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது நாம் பயன்படுத்திய பொருட்களையும் பழைய பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளது.

ஆனால் இவ்வசனம் அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணி இவ்வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை விளக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் இருந்து அகதிகளாக வந்த சிலர் பள்ளிவாசலிலேயே தங்கி இருந்தனர். மதீனா நகரத்தில் பேரீச்சை விவசாயம் செய்து வந்த நபித்தோழர்கள் கனிகள் விளைந்து அறுவடை செய்யும் போது அதில் ஓரிரு குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள்.

ஏழைகளும் பள்ளிவாசலில் தங்கியிருந்த நபித்தோழர்களும் தேவைப்படும் போது எடுத்து அதை உண்பார்கள். மதீனாவில் நன்மையான காரியங்களுக்குச் செலவிடாத சிலர் இருந்தனர். இவர்கள் அறுவடை செய்யும் போது உண்ணத்தகாதவை என ஒதுக்கப்பட்ட குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள். யாருமே சாப்பிட முடியாத பொருட்களைக் கொண்டு வந்து தாங்களும் தர்மம் செய்ததாகக் காட்டிக் கொண்ட இவர்களைக் கண்டித்துத் தான் இவ்வசனம் அருளப்பட்டது. (பார்க்க : திர்மிதி)

நமக்கு அதை அன்பளிப்பாகக் கொடுத்தால் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் தவிர நாம் வாங்க மாட்டோம் என்ற தரத்தில் அப்பொருள் இருந்தால் அதை நாம் தர்மம் செய்யக் கூடாது. நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டால் அதை வாங்கிக் கொள்வோம் என்றால் அது போன்ற பொருட்களை தர்மம் செய்யலாம்.

நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் (3:92)

இவ்வசனம் (3:92) நாம் விரும்புவதைத் தர்மம் செய்துவிட வேண்டும் என்ற கருத்தைத் தருவதுபோல் சிலருக்குத் தோன்றலாம்.

நாம் விரும்பும் பொருட்களைத் தான் தர்மம் செய்ய வேண்டும்; விரும்பாத பொருட்கள் நம்மிடம் இருந்தால் அதைத் தர்மம் செய்யக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

அதுபோல் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் தர்மம் செய்து விட வேண்டும் எனவும் இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடாது.

தர்மம் செய்வதாக இருந்தால் எது நமக்குப் பிடிக்கவில்லையோ அவற்றை மட்டும் தர்மம் செய்வது சிலரது தயாள குணமாக உள்ளது. ஒரு பொருள் பிடிக்காமல் போனால் மட்டுமே தர்மம் செய்வதும் மனதுக்குப் பிடித்த ஒரு பொருளையும் தர்மம் செய்யாமல் இருப்பதும் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.

நீங்கள் விரும்பும் பொருட்களிலிருந்து என்பதற்கும், நீங்கள் விரும்பும் பொருட்களை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

விரும்பும் பொருட்களிலிருந்து என்றால் நாம் விரும்பும் பொருட்களில் சிலவற்றையாவது என்ற கருத்தைத்தான் இது தரும்.

நமக்குப் பிடிக்காத நல்ல பொருட்களை நாம் தர்மம் செய்யலாம். அது கெட்ட செயல் அல்ல.

அல்லாஹ்வுக்காக நாம் தர்மம் செய்கிறோமா? நமக்குப் பிடிக்காத பொருள் என்பதற்காக தர்மம் செய்கிறோமா? என்பதற்கு அல்லாஹ் ஒரு சோதனை வைக்கிறான்.

தனக்குப் பிடிக்காத பொருட்களை தர்மம் செய்வதுடன் தனக்குப் பிடித்த சில பொருட்களையும் ஒருவன் தர்மம் செய்தால் அவன் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்தவனாகிறான்.

அவன் தர்மம் செய்த அனைத்துமே அவனுக்குப் பிடிக்காத பொருட்களாக மட்டுமே இருந்தால் அவன் அல்லாஹ்வுக்காகச் செய்யவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவே செய்கிறான் என்று கருதப்படுகிறான்.

இந்த அடிப்படை விஷயத்தைத் தான் நீங்கள் விரும்பக்கூடிய பொருட்களிலிருந்து என்ற சொல் மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

Saturday, March 7, 2015

மனைவி சேர்ந்து வாழ் விரும்ப வில்லை என்றால் கணவன் என்ன செய்வது ?


Thursday, March 5, 2015

முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

கேள்வி - முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே? - சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில் - விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண் களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்.

விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான்.

இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியைக் கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச் செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.

விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர். இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்படுகிறது. அவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப் படுகிறது. எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.

வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களைச் சுமக்க வேண்டும்? என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் படுத்துகின்றனர். இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப் படுகிறார்கள். ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்கா விட்டால் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள். உணவில் விஷம் கலந்தோ, அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.

அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறு வாழ்க்கை கிடைக்காமல் செய்து விடுகிறாள். அல்லது கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.

அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.


நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

Tuesday, March 3, 2015

ஹிப்னாட்டிசம் உண்மையா? - பி.ஜே

கேள்வி - ஹிப்னாடிஸம் (hypnotism) என்றால் என்ன?  அது ஒருவிதமான கலையா?  அல்லது அனைவராலும் இயலுமான காரியமா? அடுத்தவருடைய சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்வது சரியா? - சாந்து மக்பூல் கான்

பதில் பி.ஜே - ஹிப்னாடிசம் என்ற சொல்லிற்கு தமிழில் நோக்குவர்மம் என்று பெயரிட்டுள்ளனர்.

ஹிப்னாடிசம் மூலம் நொடிப் பொழுதில் நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தனது முன்னால் இருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ முடியும் என்று சிலரால் கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது வெறும் கற்பனை தானே தவிர உண்மையல்ல. இவ்வாறு செய்ய முடியும் என்று எந்த ஒரு விஞ்ஞானமும் நிரூபிக்கவில்லை. கியாமத் நாள் வரை முயற்சி செய்தாலும் நிச்சயமாக இதனை நிரூபிக்க முடியாது என்பதை உலகத்திற்கு சவாலாகவே நாம் சொல்லிக் கொள்ளலாம்.

ஹிப்னாட்டிசம் மூலம் என்னை வசப்படுத்திக் காட்டுங்கள் என்று பலரிடம் நாம் அறைகூவல் விட்டுள்ளோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்  நம்பியவர்களுக்குத் தான் இது பலிக்கும்; நம்பாதவர்களை ஹிப்னாட்டிசம் செய்ய முடியாது என்பது தான் அவர்களின் ஒரே பதிலாக உள்ளது. எல்லா பிராடுபேர்வழிகளும்(?) இதையே தான் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஹிப்னாட்டிசம் குறித்த பல நூல்களை நாம் வாசித்த போது அதில் எந்த விஞ்ஞான உண்மையோ ஏற்கத்தக்க எந்த லாஜிக்கோ இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஹிப்னாட்டிசம் செயவதாக சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கு மனநோய்க்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடிகிறது.

எந்த ஒரு ஹிப்னாட்டிச நிபுணர்(?) முன்வந்தாலும் அவர் முன்னிலையில் அது ஒரு பித்தலாட்டம் என்று நாம் நிரூபித்துக் காட்ட்த் தயாராக இருக்கிறோம்.

மார்க்க அடிப்படையிலும் இப்படி நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாகும்.

எவ்வித புறச் சாதனங்களும் இல்லாமல் பார்த்த மாத்திரத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்பது இறைவனுக்குரிய ஆற்றலாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த முடியவே முடியாது.

'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வைப் போல் யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை நாம் அறிவோம்.

எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு வகையிலேனும் இறைவனின் நிலையில் வைக்கப்பட்டால் அது அப்பட்டமான இணை வைத்தலாகும். அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதுமாகும்.

அல்லாஹ் ஒரு மனிதனை ஊனமாக்கவோ, கை கால்களை முடக்கவோ, படுத்த படுக்கையில் கிடத்தவோ நினைத்தால் அந்த மனிதன் மீது எந்த சாதனத்தையும் செலுத்தாமல், எப்படி இது நடந்தது யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் செய்து முடிப்பான்.

Sunday, March 1, 2015

மனத் தூய்மையும் மகத்தான கூலியும்...

- எம். ஷம்சுல்லுஹா

மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைகின்றதோ அவரது பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைந்து விடுகிறது. எவரது பயணம் உலகத்தை அடைவதற்காகவோ அல்லது பெண்களை மணம் முடிப்பதற்காகவோ அமையுமெனில் அவரது பயணம், அவர் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தாரோ அதற்காகவே அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: புகாரி 1


சுத்தமான அமல் சோதனையின் போது அரண்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், "நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றனர்.

அவர்களில் ஒருவர், "இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!'' என்று கூறினார்.

மற்றொருவர், "இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!'' என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.

மற்றொருவர், "இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ் வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, "அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!'' என்று கூறினார். "இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்'' என்று கூறினேன். அதற்கவர், "என்னைக் கேலி செய்கின்றீரா?'' என்று கேட்டார். "நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 2215


எண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி

"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 2118


ஊரில் இருந்தாலும் போரில் கலந்த நன்மை

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், "மதீனாவில் (போருக்கு வர வேண்டும் என்ற எண்ணமிருந்தும் வர முடியாமல் ஆகி விட்ட) சிலர் இருக்கிறார்கள். நாம் எந்த மலைக் கணவாயையும், பள்ளத்தாக்கையும் அவர்கள் நம்முடன் இருக்கும் நிலையிலேயே தவிர நாம் கடக்கவில்லை. சில காரணங்களே அவர்களை (போரில் கலந்து கொள்ள முடியாமல்) தடுத்து விட்டன'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 2839
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner